fbpx

NEET | ’ஆளுநருக்கு இப்படி ஒரு மோசமான எண்ணமா’..? ’இன்னும் சில மாதங்கள் தான்’..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்..!!

நீட் தேர்வில் (NEET Exam) இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னை மாணவர் ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் மறைவதற்குள் அவரது தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், “மாணவ கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- ”மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நன்றாகப் படிக்கும் மகன், மருத்துவர் ஆவான் என்று தான் அவரது பெற்றோர் நினைத்திருப்பார்கள். ஆனால், நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிகக் கொடூரமான நிகழ்வாகும்.

எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டாம். உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். அதற்கான சட்ட ரீதியான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். முதலில் காலம் கடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் அதை திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம்.

ஆனால், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். எங்காவது போய் இந்த மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பது தான் ஆளுநர் ரவியின் மோசமான எண்ணம். குறைவான மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி என்ற தகுதியைப் பெற்று விட்டவர்களும், பணம் வைத்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. அதை மீறி இதனுள் நுழையும் ஏழை எளிய – அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டால் சேர்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால், இது எதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தெரியவில்லை. புரிந்து கொள்ள மறுக்கிறார். பயிற்சி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டார். அதற்கு ‘நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்துப் போட மாட்டேன்’ என்று ஆளுநர் சொல்லியிருப்பதைப் பார்த்தால் அவரது அறியாமைதான் தெரிகிறது. அவரது கையெழுத்துக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை. அது ஜனாதிபதியிடம் தான் நிற்கிறது. இந்தச் சட்டத்தைப் பொறுத்த வரை அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை. இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும். அப்போது, நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். ‘கையெழுத்து போடமாட்டேன்’ என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் மறைவுக்கு எனது ஆழமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே… உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். பிறரையும் வாழ வையுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம். மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

Ather 450s | ஒருமுறை சார்ஜ் செய்தால் 115 கிமீ வரை பயணிக்கலாம்..!! இந்தியாவில் அறிமுகமான புதிய எலெக்ட்ரில் ஸ்கூட்டர்..!!

Mon Aug 14 , 2023
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் நிறுவனம் ஏதர் எனர்ஜி (Ather Energy). இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஏதர் 450எஸ் (Ather 450s) என்ற புதிய டூவீலரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சம் ஆகும். ஏதர் எனர்ஜி நிறுவனமானது இந்திய மின்சார வாகன சந்தையில் பெரும் பகுதியை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. Ather 450s இந்த ஸ்கூட்டரானது 450X ஸ்கூட்டரை போன்று அதே […]

You May Like