நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 500 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் வரும் 30ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாடு முழுவதும் நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதனையடுத்து தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டம் வலுப்பெற்றது.
தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், நாடு முழுவதும் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு இன்று மறுதோ்வு நடைபெறுகிறது. அதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.