மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடந்த இத்தேர்வை தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 95 சதவீதம் பேர் தேர்வை எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை 18 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுத சென்ற மாணவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு சென்று தேர்வு எழுதினர். பின்னர் தேர்வு எழுதி முடித்த பின், ஓ.எம்.ஆர் காகிதத்தை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே கொண்டு சென்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான முடிவுகள் தாமதாகி வந்த நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வாக தெரிவித்துள்ளது. வரும் 30ஆம் தேதி இறுதி விடைக்குறிப்பு ஓஎம்ஆர் தாள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமையே மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும். அந்த மின்னஞ்சல் வருவதற்குத் தாமதமானால் நாமே நம்முடைய தேர்வு முடிவுகளை நீட் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளைத் தரவிறக்கம் செய்ய neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.