17 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நேபாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு 8 வருட சிறை தண்டனை வழங்கி இருக்கிறது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேபாள் நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன். சுழற் பந்துவீச்சாளரான இவர் நேபாள் அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்.
ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் போன்ற புகழ்பெற்ற டி20 தொடர்களிலும் விளையாடியவர். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜனவரி 2023 ஜாமீனில் வெளிவந்த இவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இவருக்கு 10 முதல் 12 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என காத்மாண்டு மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகம் வற்புறுத்தி வந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 2023 ஆம் வருட ஆசிய கோப்பை போட்டிகளுக்கு பிறகு சந்தீப் லமிச்சேனுக்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 8 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.
மேலும் இவரது தண்டனை குறித்த விவரங்களும் இன்று வெளியாகி இருக்கிறது. இவருக்கு 8 வருட சிறை தண்டனையுடன் அபராத தொகையும் விதிக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்ற அலுவலர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அபராதங்கள் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இவர் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாடினார்.சந்தீப் லமிச்சேன் இதுவரை 51 ஒரு நாள் போட்டிகளிலும் 52 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கும் இவர் ஒரு நாள் போட்டிகளில் 98 விக்கெட்டுகளும் டி20 போட்டிகளில் 112 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.