சமூக ஊடக பிரபலங்கள் தாங்கள் அங்கீகரிக்கும் தயாரிப்புடன் தங்கள் தொடர்பை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட உள்ளது..
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிகப் ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளை ஆதரிக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, சமூக பிரபலங்கள் பணம் வாங்கிய பிறகு எந்த பிராண்டிற்கும் ஒப்புதல் அளித்தால், அவர்கள் அந்த பிராண்டுடன் தங்கள் தொடர்பை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), இது தொடர்பாக அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்துள்ளது. பெய்டு புரோமோஷன் பதிவுகளில் சமூக ஊடக பிரபலங்கள் மறுப்பு (Disclaimer) போட வேண்டும்.. அடுத்த 15 நாட்களுக்குள் புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன..?
- பெய்டு புரோமோஷனுக்கு மறுப்பு கொடுக்க வேண்டும்..
- வழிகாட்டுதல்களில் பிரபலங்களும் சேர்க்கப்படுவார்கள்
- செயல்படுத்தப்படவில்லை என்றால், CCPA நடவடிக்கை எடுக்கும்
- முதல் முறை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம், இரண்டாவது முறை ரூ.20 லட்சம், தொடர்ந்து மீறினால் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்..
இதற்கிடையில், இ-காமர்ஸ் இணையதளங்களில் வெளியிடப்படும் போலி மதிப்புரைகளைத் தடுக்க ஒரு கட்டமைப்பை உருவாக்கும் செயல்முறையை மத்திய அரசு நிறைவு செய்துள்ளது. இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பின்பற்றும் தற்போதைய வழிமுறைகள் மற்றும் உலகளவில் கிடைக்கும் சிறந்த நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகு இந்த கட்டமைப்பை உருவாக்க துறை முடிவு செய்தது.
இ-காமர்ஸ் தயாரிப்பை நேரடியாக சென்று பார்க்கவோ அல்லது பரிசோதிக்கவோ வாய்ப்பில்லாமல் ஒரு மெய்நிகர் ஷாப்பிங் அனுபவத்தை உள்ளடக்கியிருப்பதால், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பொருட்களை அல்லது சேவையை வாங்கிய பயனர்களின் கருத்து மற்றும் அனுபவங்களைப் பார்க்க தளங்களில் வெளியிடப்பட்ட மதிப்புரைகளை பெரிதும் நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..