இன்றைய தினம் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி மதியம் 12:00 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்து இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தெரிவித்து விட்டனர்.
இந்த நிலையில் தான் மல்யுத்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாவை சேர்ந்த கிஷான் மஸ்தூர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அம்பாலா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்..
மேலும் அவர்கள் டெல்லி ஜந்தரமந்தரில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து நேற்று வருகை தந்தனர். அம்பாலா பகுதிக்கு வருகை தந்த அவர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அந்த பகுதியில் இதன் காரணமாக சற்று நேரம் சலசலப்பு காணப்பட்டது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வழங்கிய புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.