வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. வங்கதேசத்தின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பதவியேற்கவுள்ளார். இவர், பிரதமர் அதிகாரத்துடன் பதவி ஏற்றாலும் பிரதமர் என்ற பெயர் இருக்குமா என்ற விவரம் வெளியாகவில்லை. அந்நாட்டின் தலைவர், புதிய அரசின் தலைமை ஆலோசகர் என்ற பெயரில் முகமது யூனுஸ் பதவி ஏற்பார்.
யார் இந்த முகமது யூனுஸ்..?
* முகமது யூனுஸ் (வயது 83), முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் தீவிர எதிர்ப்பாளர். இவர், 1983ஆம் ஆண்டு கிராமீன் வங்கியை நிறுவி, தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார். மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதில் அவரது கிராமீன் வங்கி வெற்றி பெற்றதுடன் மற்ற நாடுகளிலும் இதேபோன்ற முயற்சிகளுக்கு வழி வகுத்தது.
* ஏழைகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சிறு கடன்களை வழங்குவதில் முன்னோடியாக திகழ்ந்தார். இவருக்கு 2006இல் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. யூனுஸ் 2007இல் ஒரு ராணுவ ஆதரவுடைய ஆட்சி நடக்கும்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார். ஆனால், அவர் அதை செய்யவில்லை.
* இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு, முகமது யூனுசுக்கு எதிராக பல்வேறு விசாரணைகள் நடைபெற்றன. இதனால் அவர் ஷேக் ஹசீனா அரசை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, 2011இல் கிராமீன் வங்கி இயக்குனர் பதவியில் இருந்து யூனுஸ் நீக்கப்பட்டார்.
* இந்தாண்டின் தொடக்கத்தில், மோசடி வழக்கில் யூனுஸ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளாத நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
* இந்நிலையில் தான், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது.
Read More : தப்பியோடிய ஷேக் ஹசீனா..!! வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு..!!