பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர்.
அனைவருக்கும் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை பல தரப்பினர் எழுந்து எழுந்து வரும் நிலையில் அதனை தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்பொழுது முதற்கட்டமாக மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும், குறிப்பாக, தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு, புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.