புதிய தொலைத் தொடர்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலை பெற்றது. 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெலிகிராம் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறைவேற்றப்படுகிறது. இந்த புதிய தொலைத்தொடர்பு சட்டமானது அவசர காலங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்குகளின் கட்டுப்பாட்டை ஏற்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் விதிகளை உள்ளடக்கியது.
தொலைத்தொடர்புச் சட்டம் 2023 இன் கீழ் புதிய விதிகள் ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரும். புதிய தொலைத்தொடர்பு சட்டம் இந்திய தந்தி சட்டம் (1885) மற்றும் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் 1933 ஆகிய இரண்டையும் மாற்றும். புதிய சட்டம் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் குறிக்கிறது.
புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டப்பிரிவுகள் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 வரையிலான விதிகளின் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களை மேம்படுத்துவதற்கும் தொலைத் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள், பாதுகாப்பு போன்றவற்றிற்கான தர நிலைகள் அமைக்கும் அதிகாரங்ளை இந்த சட்டம் வகுத்துள்ளது. இந்த சட்டத்தில் புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரும் விதியானது, தேசிய பாதுகாப்பு, வெளி நாடுகளுடனான நட்புறவு அல்லது போரின் போது நெட்வொர்க்கின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ள அனுமதிக்கும். புதிய சட்டம் மக்கள் தங்கள் பெயரில் அதிகபட்சம் ஒன்பது சிம் கார்டுகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், ஜம்மு மற்றும் காஷ்மீர் அல்லது வடகிழக்கில் வசிப்பவர்கள், ஆறு சிம் கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.
அதிகபட்ச வரம்பைத் தாண்டிச் சென்றால், முதல் முறை மீறலுக்கு ரூ. 50,000 அபராதமும், அதைத் தொடர்ந்து மீறினால் ரூ. 2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் மேலும், அடையாள ஆவணங்களை பயன்படுத்தி, மற்றவர்களை ஏமாற்றி சிம்கார்டு பெற்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
மேலும், தனியார் சொத்துக்களில் மொபைல் டவர்களை நிறுவவோ அல்லது தொலைத்தொடர்பு கேபிள்களை அமைக்கவோ டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர் அதை எதிர்த்தாலும், அதிகாரிகள் அதை ஒரு தேவையாக நம்பும் வரை இதைச் செய்யலாம்.
தேசத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் சூழ்நிலைகளில், அல்லது அவசரகால சூழ்நிலைகளின் போது, செய்திகளின் பரிமாற்றங்களைத் தடுக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும், அழைப்பு தொடர்புகளை கட்டுப்படுத்தவும் டெலிகாம் சேவையை இடைமறிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.