இந்தியாவில் மோசடி அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை இறுதியாக வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ‘வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது செட்டிங்ஸில் “Silence Unknown Callers” அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியப்படாத அழைப்புகள் அல்லது ஸ்பேம் அழைப்புகளை புறக்கணிக்க முடியும்’ என்று அறிவித்தார்.அதிகாரப்பூர்வ தள பதிவில், தெரியாத அழைப்புகளால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயனர்களுக்கு இந்த புதிய “Silence Unknown Callers” அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை WhatsApp கூறியுள்ளது. மேலும் இந்த அம்சமானது ஸ்பேம், ஸ்கேம்கள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை பிளாட்ஃபார்மில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக தானாகவே திரையிடும் என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் வகையில் “பிரைவேசி செக்அப்” என்ற புதிய அப்டேட்டையும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் இந்த அம்சத்தை மிகவும் எளிதான ஒன்றாகவே அப்டேட் செய்துள்ளது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் செட்டிங்ஸில் சென்று பிரைவேசி ஆப்சனிற்கு செல்லவேண்டும். பிரைவேசியில் “Calls” டேப்பிற்கு செல்லவேண்டும். கால்ஸ் பிரிவில் “தெரியாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்து / Silence unknown callers” விருப்பத்தை மாற்றி வைக்க வேண்டும்.
தெரியாத அழைப்பாளர்களை சைலன்ஸ் செய்யும் அம்சத்தை தொடர்ந்து, பயனர்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் “பிரைவேசி” ஆப்சனில் பலபுதிய அப்டேட்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது