நியூசிலாந்தின் 1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான வரலாற்றில் முதன்முறையாக 21 வயது இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண், ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க். இவர் தன்னை ஓர் அரசியல்வாதியாக நினைக்காமல், மாவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பர்ய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ள ஒரு பாதுகாவலராகவே நாடாளுமன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த நிகழ்வு சர்ச்சையாக வெடித்துள்ளது. நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ACT கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது.
அதன் படி நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்ததோடு சட்ட நகலை கிழித்தெரிந்தார். இது நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி :1840 ஆம் ஆண்டு வைதாங்கி ஒப்பந்தத்தின்படி, பழங்குடியினர் தங்கள் நிலங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆங்கிலேயர்களுக்கு ஆட்சியை வழங்குவதற்குப் பதிலாக அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் உரிமைகள் உறுதியளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அரசாங்கத்திற்கும் மாவோரிக்கும் இடையிலான உறவை வழிநடத்துகிறது. அந்த உரிமைகள் அனைத்து நியூசிலாந்தர்களுக்கும் பொருந்தும் என்று மசோதா குறிப்பிடுகிறது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், நாட்டின் மத்திய-வலது கூட்டணி அரசாங்கத்தின் கூட்டாளியான ACT நியூசிலாந்து கட்சியால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவு குறைவாக உள்ளது மற்றும் சட்டமாக மாற வாய்ப்பில்லை. இந்த மசோதா இன முரண்பாடு மற்றும் அரசியலமைப்பு எழுச்சியை அச்சுறுத்துவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இது நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பியது. எனினும், முன்மொழியப்பட்ட சட்டம் அதன் முதல் வாக்கெடுப்பை வியாழக்கிழமை நிறைவேற்றியது.