தேனி மாவட்டத்தில் வேலைக்குச் செல்லத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததால் திருமணமான 4 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தெற்கு தெருவை சார்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் காளிதாஸ். இவருக்கு பிரபா என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்திருக்கிறார் ஈஸ்வரன். திருமணமான நாளிலிருந்து எந்தவித வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார் ஈஸ்வரன். திருமணமான பின் ஒரிரு மாதங்களில் வேலைக்குச் செல்வார் என்று எதிர்பார்த்த புதுப் பெண்ணிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. வேலைக்குச் செல்லாமல் எப்போதும் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
இது தொடர்பாக இருவருக்குமிடையே அடிக்கடி சின்ன சின்ன சச்சரவுகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் திருமணமாகி நான்கு மாதங்கள் கழிந்தும் காளிதாஸ் வேலைக்கு செல்லாததால் கோபமடைந்த பிரபா அவருடன் சண்டை போட்டுவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தனது மனைவியை சமாதானம் பேச அவரது மாமனார் வீட்டிற்கு சென்றிருக்கிறார் காளிதாஸ்.
தனது மனைவி பிரபாவை தன்னுடன் வருமாறு கூறியிருக்கிறார். வேலைக்குச் செல்லாமல் கணவர் வீட்டிற்கு செல்வதாக இல்லை என திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார் பிரபா. இதனால் மனம் உடைந்த காளிதாஸ் வீட்டிற்கு வந்து பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காளிதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை இது தற்கொலையா? என்ற ரீதியில் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான நான்கே மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் கண்டமனூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.