நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகில் உள்ள மெட்டாலா செம்மண்காடு கிராமத்தில் வசிப்பவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன் (10). இவர் ஆயில் பட்டியல் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சிறுவன் பிரபாகரன், செம்மண்காடு பேருந்து நிறுத்தம் இருக்கும் நிழற்குடையில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக நாமக்கல் நோக்கி தனியார் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க ட்ரைவர் பேருந்தை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிழற்குடையின் மீது அதிவேகமாக மோதியது. இதில் அங்கு நின்றிருந்த பிரபாகரன் மீதுபேருந்து சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் மதுமிதா, கிருத்திகா லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை அங்கிருந்த மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆயில்பட்டி போலீசார், விபத்தில் உயிரிழந்த மாணவர் பிரபாகரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் அன்பழகனிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் செம்மண்காடு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.