தமிழகத்தில் முதல்முறையாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600/ 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இந்த மாணவியை முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியருடன் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல நேற்று டிஜிபி சைலேந்திரபாபு மாணவி நந்தினியை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டி இருக்கிறார்.
அப்போது மாணவியின் நந்தினியிடம் எப்படி 600 மதிப்பெண்கள் முழுமையாக எடுக்க முடிந்தது? எனவும், சிறப்பாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பதில் அளித்த மாணவி நந்தினி, என்னுடைய குடும்பம் வறுமையில் வாடினாலும், நான் இப்போது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டது இல்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் சிறுவயதில் இருந்து எனக்கு படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய ஊக்கம் தான் நான் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்குவதற்கு காரணமாக இருந்தது. நான் துவண்டு போகும் போதெல்லாம் எனக்கு நானே பேசிக் கொள்வேன். என்னுடைய self motivation தான் என்னுடைய வெற்றிக்கான ரகசியம் என கூறியிருக்கிறார்