சிக்பள்ளாப்பூர், குடிபண்டேவில் உள்ளவர் ஷைமுலா. இவரது மகன் கோபி கிருஷ்ணா(17). இவர் பி.எஸ்.சி. இரண்டாம் வருடம் படித்து வந்தார். கோபிகிருஷ்ணா செல்போனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்ததால், அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி கோபி கிருஷ்ணா வீட்டில் இருக்கும்போது செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் ஆத்திரத்தில் அவரை கண்டித்துடன் மட்டுமல்லாமல், அவர் கையில் இருந்த செல்போனையும் வாங்கி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி கிருஷ்ணா வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. எனவே இதுகுறித்து அவரது பெற்றோர் குடிபண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தங்களது மகன் கானாமல் போய்விட்டதாகவும், அவனை கண்டுபிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கோபி கிருஷ்ணாவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று குடிபண்டே அருகே இருக்கும் தோட்டம் ஒன்றில் மரத்தில் கோபி கிருஷ்ணா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த குடிபண்டே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் காவல்துறையினர் கோபி கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கோபி கிருஷ்ணா தூக்குப்போட்டு நீண்ட நாட்கள் ஆகியிருந்ததால் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற கோபி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். மேலும் பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவன் காணாமல் போய் 22 நாட்கள் கழித்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.