தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள வீரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முத்துகுட்டி (50). இவர் விவசாயம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் முத்துகுட்டி சொந்தமாக வேன், மினி லாரி வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர் மாணிக்கராஜ் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. ரேஷ்மா, மாணிக்கராஜ் இரண்டு பேரும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்தவுடன், தனது மகளின் காதலுக்கு முத்துகுட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் அவர் தனது மகளுக்கு வேறொரு வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி ரேஷ்மாவும் மாணிக்க ராஜும் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கேயே தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கு மாணிக்கராஜின் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாணிக்கராஜின் தாய் மகாலட்சுமி, வேலைக்கு சென்று விட்டார். இதனால் மாணிக்க ராஜும் ரேஷ்மாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். மாலையில் வேலை முடிந்து மகாலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்த போது அவரது மகன் மாணிக்கராஜூம், மருமகள் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அதை பார்த்து மகாலட்சுமி அதிர்ச்சியில் கதறி அழுதார்.
இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து புதுமண தம்பதியின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகளின் காதல் திருமணத்தை விரும்பாத முத்துகுட்டி ஆத்திரத்தில் தனது மகள், மருமகன் என்றும் பாராமல் அவர்களை அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்ததுள்ளார். இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துகுட்டியை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்துக்குட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.