நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் மைக்கேல் ஜார்ஜ் பிரபு (39). இவருடைய மனைவி மேரி அஸ்வதி (33). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் மேரி அஸ்வதி நாகர்கோவில் ராம அச்சன்புதூரில் இருக்கும் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு மட்டும் தனியாக இருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வடக்கன்குளம் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த அவரை திடீரென காணவில்லை. வீடு பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு வீட்டு பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பணகுடி காவல்துறையினர் அங்கு வந்து மைக்கேல் ஜார்ஜ் பிரபு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அழுகிய நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு உடல் கிடந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் அஜீகுமார் ஆகியோர் வந்து விசாரித்தனர். நெல்லை தடயவியல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டு சொந்த ஊருக்கு வந்தவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.