மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகே பை ஒன்று கிடந்தது. அந்த வழியே சென்ற ஒருவர் அந்த பையை பார்த்து சந்தேகமடைந்து, இதுகுறித்து வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பையை பிரித்து பார்த்தபோது, அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் இருந்தது. பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. இதை தொடர்ந்து, வசாய் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக பெண்ணின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
15 வயதுடைய அந்த சிறுமி மும்பையின் அந்தேரி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். காலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வராததால் கலக்கமடைந்த, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சிறுமியின் உடல் கிடைத்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.