திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து அன்றிரவு கலை நிகழ்ச்சி நடந்தது. எனவே கிராம மக்கள் அங்குக் கூடியிருந்தனர். ஆரணி நகர காவல் துறையினர் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில், சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை கவனித்தனர்.
எனவே காவல்துறையினர் அந்த இளைஞரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவர் ஒரு வீட்டின் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சுவர் ஏறி உள்ளே குதித்தார். அவரை பின்தொடர்ந்த காவல்துறையினரும் தாவி குதித்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். திருடனாக இருக்கும் என்ற சந்தேகத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றும் விசாரித்தனர். அப்போது அவர் திருடன் இல்லை என்றும், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு, வேறொருவரை திருமணம் செய்த காதலியைச் பார்த்து நியாயம் கேட்பதற்காக வீட்டுக்குள் குதித்தித்துள்ளார் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அந்த இளைஞர், போளூர் அருகில் உள்ள பொன்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. 27 வயதாகும் அந்த இளஞரும், இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்ய வேண்டுமெனில், அந்த இளைஞர் வேலையில் இருக்க வேண்டுமென அந்தப் பெண் கன்டிஷன் போட்டுள்ளார். அதனால் அந்த இளைஞரும் மலேசியாவுக்கு சென்று கார்பெண்டர் வேலை செய்து வந்தார். ஓரளவு பணம் சம்பாரித்த பின்னரே ஊர்த் திரும்ப வேண்டுமென காதலி சொன்னதால், கடுமையாக உழைத்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் தன் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த இந்த திருமணம் நடந்துள்ளது. இதை தொடர்ந்து, மலேசியாவிலிருந்த காதலனுடன் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்துவிட்டார். நண்பர்கள் மூலம் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் ஆனதை தெரிந்துகொண்ட, இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.
எனவே, உடனடியாக மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். தன்னை ஏமாற்றிய காதலியை சந்தித்து நியாயம் கேட்க பலமுறை முயற்சி செய்தார். சரியான நேரம் அமையாததால், அவர்களால் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் தான் திருவிழா நேரத்தில், காதலியின் ஊருக்கு வந்துள்ளார் அந்த இளைஞர். அந்த பெண்ணிடம் போனில் பேசிவிட்டு, அந்த பெண்ணின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்தபோது, காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர், இளைஞரின் தந்தையை காவல் நிலையம் வரவழைத்து நடந்ததை சொல்லி எச்சரித்தனர். பிறகு எழுதி வாங்கிக்கொண்டு இளைஞரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.