திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் ஜார்ஜ். இவரது மகன் ராபின் (24). இவர் கும்முடிபூண்டி அருகே உள்ள புதுவாயலில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். ராபினின் நண்பர் திருமண விருந்து நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகேயுள்ள பொந்தவாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் கடந்த 31-ஆம் தேதி இரவு நடந்தது. அந்த திருமண விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பிறகு இரவு சுமார் 11 மணி அளவில் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினர்.
ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகில் ராபின் வந்து கொண்டிருந்த போது இரண்டு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரிவாளால் தாக்கிய கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செங்குன்றம் அருகே இருக்கும் சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (23), மதுரையை சேர்ந்த சரவணன் (26), ராகுல் (26) ஆகியோர் கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனிடையே இந்த மூன்று பேரும் ஊத்துக்கோட்டை அருகில் இருக்கும் தாராட்சி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று இரவு அவர்களை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மூவரையும் ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.