கரூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி சப்ரின் இந்த தம்பதிகளுக்கு சுயநிதி( 8), பர்வேஷ்(5) என்று 2 குழந்தைகள் இருக்கின்றன. 4 பேரும் பல்லடத்தில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு நேற்று கரூரில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சப்ரீனிடம் குளிர்பானத்தை கொடுத்து அதை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குளிர்பானத்தை வாங்கி குழந்தைகள் இருவருக்கும் கொடுத்திருக்கிறார். குளிர்பானத்தை இருவரும் குடித்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் வந்தபோது சிறுவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர்.
குளிர்காலத்தை குடித்ததால் இருவரும் மயங்கி இருக்கலாம், குழந்தைகளை கடத்துவதற்கு அந்த பெண் திட்டம் தீட்டி இருக்கலாம். என்ற சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறுவர்கள் இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து பல்லடம் காவல்துறையினர் தெரிவித்ததாவது, சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கப்பட்டு இருந்ததா? அல்லது விஷமான குளிர்பானமா? என்பது தெரியவில்லை. சிறுவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். குளிர்பானத்தை கொடுத்த அந்த மர்ம பெண் கோவைக்கு செல்வதாக சப்ரினிடம் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்