காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அடுத்துள்ள திருவேங்கடம் அவன்யூ பகுதியில் வசித்து வருபவர், பால் பிரபு தாஸ். இவருடைய மனைவி செல்வராணி, சின்ன காஞ்சிபுரம் சிஎஸ்சி மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் வின்சென்ட் ஜான் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வந்தார். இவருடைய இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த இளைய மகனை கண்டித்த தாயை அவர் தாக்கியதாகவும், இதனை தட்டிகேட்ட அண்ணனை அவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் குடி போதைக்கு அடிமையானது குறித்தும், கஞ்சா போதைக்கு அடிமையானது குறித்தும் இதன் காரணமாக நடந்த கொலை சம்பவம் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது :-
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்திருக்கிறான். மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.
கொலை செய்த தம்பிக்கு 17 வயது தான். அவரது தாய், தந்தையர் இருவரும் ஆசிரியர்கள். 12-ஆம் வகுப்பு பயிலும் அவர் நன்றாக படிக்கக் கூடியவர் தான். ஆனால், இத்தனை நல்ல விஷயங்களையும் சிதைத்து அந்த சிறுவனை கொலைகாரனாக்கியிருக்கிறது மதுபோதை. அப்படியானால் அது எவ்வளவு கொடியது?.
மனிதன் இயல்பான நிலையில் தாயை தாக்க முனைய மாட்டான்; அண்ணனை கொலை செய்ய முயலமாட்டான். ஆனால், பதின்வயதை தாண்டாத சிறுவன் இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியிருப்பதற்கு காரணம் அவனை இயக்கிய மது அரக்கன் தான். அந்த சிறுவன் கஞ்சாவுக்கும் அடிமை எனக் கூறப்படுகிறது.
இது போன்ற கொடிய நிகழ்வுகள் வாரம் ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கான தீர்வு என்ன? என்பது அரசுக்கும் தெரியும். எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.