நலத் திட்டங்கள் என்பது வேறு, இலவசங்கள் என்பது வேறு, இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தி.மு.க அறிவித்த 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், பாதிக்கும் மேற்பட்டவை தேவையில்லாத இலவசங்கள் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இலவசங்களையும், அரசின் கடமைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.
அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க மக்களவை உறுப்பினரான கனிமொழி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அந்த இலவச மின்சாரம் இல்லை என்றால் இன்று பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.
மேலும், அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு இலவச கல்வி, இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்வது. அது ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்பது, மக்களை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.