சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில் பெட்டிகள் வாங்கப்பட்டது. அப்படி வாங்கப்பட்டதில் 200 கோடி ரூபாய் லஞ்சம் கை மாறி உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி இருந்தார்.
இந்த டெண்டரை வாங்கிய பிரான்சை சேர்ந்த நிறுவனத்திற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலுமாக தவறானது என்று மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எந்த ஒளிவு மறைவில் இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் நேர்மையான முறையில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உள்நாட்டில் பெட்டிகளை தயாரித்தால் விலை குறைவாக கிடைக்கும் என்ற காரணத்திற்காக, டெண்டர் குறித்து கூடுதலான சேர்க்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் உள்நாட்டில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சுங்க கட்டண சலுகை கிடைக்கும். அதோடு தொழில்நுட்ப அடிப்படையில் மிட்சு பிஷி உள்ளிட்டவற்றின் டெண்டர் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் டெண்டரில் குறைந்த தொகையை முன்வைத்த எல் ஒன் நிறுவனமான அல்ஸ்டாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக பொதுமக்களின் பணம் சுமார் 250 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. ஆகவே எல்லா குற்றச்சாட்டுகளும் உண்மை தன்மையற்றவை என்று கூறியுள்ளது. அதோடு எந்த போலியான நிறுவனத்துடனும் எங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது