எவ்வளவுதான் போலீசாரும் பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி படிகள் நின்றவாறு பயணம் செய்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான பேருந்துகள் பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்று கூறலாம். ஆனால் அதே நேரத்தில் என்னதான் பேருந்தில் நெரிசல்கள் இல்லை என்றாலும் கூட சில சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்வதை சாகசமாகவும், கெத்தாகவும் நினைக்கின்றனர்.
இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் ஏற்க மறுத்து விடுகின்றனர். அந்த வகையில் அருப்புக்கோட்டையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் மாதேஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.
அவர் படியில் தொங்கியவாறு பயணித்ததால் தவறி விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோரிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.