டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான ஆலைக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிஷ் சிசோடியாவின் வீடு உட்பட அவர் தொடர்புடைய 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
துணை முதல்வர் வீட்டி சி.பி.ஐ ரெய்டு நடந்து வருவது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சதா நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- துணை முதல்வர் சிஷோடியா வீட்டில் சி.பி.ஐ இன்று ரெய்டு நடத்தி வருகிறது. இந்த சோதனையில் அவர்களுக்கு பென்சிலும், ஜாமெண்டரி பாக்ஸும்தான் கிடைக்கும்.
பஞ்சாபில் இந்த ஆண்டு ஆம் ஆத்மி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, நாட்டு மக்கள் மோடிக்கு மாற்றாக கெஜ்ரிவாலை நினைக்க தொடங்கியுள்ளனர். மென்மேலும் அர்விந்த் கெஜ்ரிவாலின் அரசியல் அந்தஸ்து வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக, பா.ஜனதா கட்சியும், மோடியும் கெஜ்ரிவாலை பார்த்து அஞ்சுகின்றனர். கெஜ்ரிவாலின் புகழ் மற்றும் மக்கள்அவருக்கு அளித்துவரும் ஆதரவு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துள்ளது. இதனால் மக்கள் கெஜ்ரிவால் ஆட்சியைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள் என்று ராகவ் சதா கூறினார்.