அரசு டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக்கூடாது என்று சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயினர். இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில் வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரசு டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் பெறக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருப்பதாகவும், அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றால் அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் தான் பொறுப்பு எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
இந்த நிலையில், அரசு டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக்கூடாது என்று எந்த விதமான சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. அது முற்றிலும் தவறான தகவல் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்