முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தாமூர் குருவட்டம், பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த வசந்தா, செல்வம், மாரியப்பன், பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மற்றும் சந்திரா உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்குமாறு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கு தலா50000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறேன் என்று முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையின் மூலமாக தெரிவித்து இருக்கிறார்.