விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கறது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்காக நான்கு நாட்கள், பௌர்ணமிக்காக நான்கு நாட்கள் என மொத்தம் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்றினால் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல கட்டுப்பாடுகளுடன் கடந்த 25 -ஆம் தேதி முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு சென்று வந்தனர்.
கோயிலுக்கு செல்வதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள உப்புத் துறை மலைப்பாதை வழியாகவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்று வந்த நிலையில் நள்ளிரவில் வரும் வழியில் யானைக்கஜம் அருகே தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அருவிக்கு அந்த பக்கமாக 200 க்கும் அதிகமான பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.
பக்தர்கள் கூச்சலிட்டதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மயிலாடும்பாறையில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கயிற்றின் மூலம் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் சேர்ந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். திடீரென ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.