தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அடுத்த பாப்பா நாடு வேதநாயகிபுரம் கிராமத்தில் குடியிருப்பவர் பிரபு. இவருக்கும் காயத்ரி என்பவருக்கும் கடந்த ஐந்து வருங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருந்தாலும் தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற கவலையில் இருந்து வந்துள்ளார் பிரபு. இதனால் பிரபுவிற்கும் அவரது மனைவி காயத்ரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் காயத்ரி. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயத்ரியிடம் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்கு மூலத்தில், மாமியார் அன்னக்கிளியும், மாமனாரும் என்னை பிடித்துக் கொண்டனர் கணவர் பிரபு என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார் என்று அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து காயத்ரியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதற்காக அன்னக்கிளி அவரது கணவர் மற்றும் பிரபு ஆகியோர் மீது பாப்பநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னாவின் உத்தரவின் பேரில் பாப்பநாடு இன்ஸ்பெக்டர், பிரபுவை கைது செய்து செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் காயத்ரி.