ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் தீவிரம் அடைந்து சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பாகலூர் ரவுண்டானா, ராயக்கோட்டை ரவுண்டானா போன்ற பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக தோற்றமளித்தது.
மேலும் ஓசூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்து குட்டையானது. இதேபோல, ஓசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சிப்காட் பகுதியில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையின் எதிரே இருக்கும் மேம்பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழை நீரில் மிதந்தவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர். கனமழையின்போது ஓசூர் ஜி.ஆர்.டி. ரவுண்டானா அருகே வந்த ஒரு முதியவர், தடுமாறி அங்கு இருந்த கால்வாயில் விழுந்தார். இதை பார்த்தவர்கள் முதியவரை கால்வாயில் இருந்து மீட்டனர்.
ஓசூர் அருகே கொலதாசபுரம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். ஓசூரில் கனமழையை தொடர்ந்து, விட்டு, விட்டு இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் அருகேயுள்ள மிடுதே பள்ளி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் வகுப்பறைக்குள் புகுந்த நீரை மாணவ, மாணவிகளே வெளியேற்றி வகுப்பறைகளை சுத்தம் செய்தனர்.