தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று காரைக்குடி புதுச்சந்தை பேட்டை தெற்கு பகுதியில் இருந்தது. அந்த செல்போன் கோபுரம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் இந்த செல்போன் கோபுரம் பயன்பாட்டில் இல்லை என்று கூறப்படுகின்றது.
இத்தகைய நிலையில், செல்போன் கோபுர நிறுவன அதிகாரிகள், தாஜ்மல்ஹான் மேலாளர் சுரேஷ், டெக்னீசியன் கணேஷ் பிரபு உள்ளிட்டோர் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்ய அந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது செல்போன் கோபுரம் மாயமானதால் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக இது தொடர்பாக காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், காரைக்குடி தெற்கு பகுதி காவல்துறையைச் சார்ந்தவர்கள் ஹெல்ஃபோன் கோபுரம் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே முத்துப்பட்டணம் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த செல்போன் கோபுரம், கம்பன் அருணாச்சலம் தெருவில் 2003 முதல் இயங்கி வந்த செல்போன் கோபுரம் உள்ளிட்டவையும் காணாமல் போயிருக்கின்றன. இவை தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் வழங்கப்பட்டது. இந்த வழக்குகளை காரைக்குடி வடக்கு காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.