மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கூவலப்புரம், காவட்டுநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுபற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது டி.கல்லுப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரத்தில் உள்ள வெங்கடாசலபதி மகன் பாலாஜி (25) என்பது தெரிந்தது. இது குறித்து பேரையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் வசிக்கும் வெங்கடாசலபதி என்பவரது மகன் பாலாஜி (25), தி.மு.க கட்சிக்காரரான இவர் எல்.எல்.பி. படித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இவரது மனைவி தர்ஷினிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. குழந்தை பிறந்துள்ளதால், தர்ஷினி கோவில்பட்டியில் உள்ள தனது அம்மா வீட்டில் உள்ளார்.
கடந்த 24- ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற பாலாஜி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பாலாஜியின் பெற்றோர் அவர் மனைவியை பார்க்க சென்று இருக்கலாம் என நினைத்து அமைதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், எம்.சுப்புலாபுரம் அருகே சிட்டுலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காடனேரி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார்.
தகவல் அறிந்து வந்த பேரையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் கிடந்த உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வெளியே எடுத்தனர். இந்நிலையில் அந்த உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடம்பு முழுவதும் சாக்கால் போர்த்தி இருந்தது. சாக்கை விலக்கி பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து இறந்த நபர் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற தி.மு.ககாரர் பாலாஜிதான் அது என்பது தெரியவந்தது.