சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40) பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் சீனிவாசன் தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவரின் 16 வது நாள் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
அப்போது ஒரு ஆட்டோ, 4 இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் அங்கு வந்த ஒரு கும்பல், சீனிவாசனை சரமாரியாக வெட்டியது. இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் சிதறி ஓட தொடங்கினர். ஆனால் சீனிவாசனின் 17 வயது மற்றும் 15 வயது மகன்கள் தங்களுடைய தந்தையை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தனர். ஆனாலும் அந்த நபர்கள் 2 சிறுவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
இதற்கு நடுவே அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்த ஆதம்பாக்கம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல படுகாயம் அடைந்த அவரது 2 மகன்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உயிரிழந்த சீனிவாசன் 2014 ஆம் வருடம் ஒரு கொலை வழக்கிலும், 2021 ஆம் ஆண்டு ஆதம்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடியான நாகூர் மீரான் என்பவரின் கொலை வழக்கிலும் சிறைக்கு சென்று வந்தவர். அதோடு, அவருடைய கொலைக்கு இந்த முன் விரோதம் தான் காரணமா? என்ற பாணியில் விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன் (28), ஆலந்தூரை சேர்ந்த மணிகண்டன் (27) உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து, விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல் துறை ஆய்வாளர் வீரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.