செங்கல்பட்டு சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ஐந்தாவது நிழற்சாலை பகுதியில் வசித்து வருபவர் விக்கி என்ற மைக்கா (27). இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் அவரது நண்பர்களுடன் ஆறாவது நிழற்சாலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்தில் விக்கியை ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியுள்னர். இதை பார்த்தவர்கள் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த விக்கியை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் இருந்த சாமுவேல் என்பவரையும் மர்மநபர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். தலை, கை, கைவிரல் என உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த விக்கி நேற்று காலை ஒன்பது மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விக்கியின் தந்தை ராஜா, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து செம்மஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கரி என்ற ராமு, சின்னராசு, விநாயகம் என்ற கோட்டி, அப்பு என்ற ஜெயவேலு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆட்டோ டிரைவர் விக்கியை கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றது தெரியவந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராமுவை பிடித்து காவல நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.