விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள விட்டலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் சகலகலாதரன்(59) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் வருகை பதிவேட்டை எடுப்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் அந்த மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அதனை வாங்கிய மாணவிக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர்.
இதன் காரணமாக, அதிர்ச்சியில் உறைந்த அந்த மாணவி அந்த அறையில் இருந்து அழுதபடி வெளியே ஓடிவந்துள்ளார். அதன் பிறகு தலைமை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதாக சக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தெரிவித்துள்ளார் அந்த மாணவி. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் உட்பட சுமார் 300 பேர் அந்த பள்ளியை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ரோஷனை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி மாணவி மற்றும் தலைமை ஆசிரியரிடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் விசாரணை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்கள் முயற்சி செய்தனர். அப்போது அவரை காவல்துறையின் வேனில் ஏற்றிய போது பொதுமக்கள் ஆசிரியரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அவர் மீது தாக்குதல் நடத்தினர். பின்பு அவர்களை சமாதானப்படுத்தி விட்டு ஒரு வழியாக ஆசிரியரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கு வேனில் ஏற்றினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.