தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வருமான உண்டியலாக இருப்பது டாஸ்மாக் நிறுவனம்தான் இந்த நிறுவனத்தில் வரும் வருமானத்தை வைத்து தான் தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
ஆனால் இந்த டாஸ்மாக் நிறுவனம் மூலமாக அரசுக்கு வரும் வருமானத்தை மட்டுமே பார்க்கும் தமிழக அரசு, இந்த டாஸ்மாக் நிறுவனத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் துன்பத்தை எப்போதும் கவனத்தில் கொண்டதில்லை.
இந்த மதுவின் காரணமாக தான் தமிழகத்தில் பல விபத்துகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பல குடும்பங்களுக்குள் தகராறு ஏற்படுவது உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுமே வருகின்றன.
அந்த வகையில் தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மாகுளம் பகுதியில் சேர்ந்த சின்னத்தம்பி(55) என்பவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி அமுதா மற்றும் மகன் சின்னதுரை உடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். சின்னத்தம்பியின் மகன் சின்னதுரை தஞ்சையில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தான் சின்னத்தம்பி வேலைக்குச் சென்று அதில் வரும் ஒட்டுமொத்த வருமானத்தையும் டாஸ்மாக் நிறுவனத்தில் செலவழித்து குடித்துவிட்டு வீட்டிற்கு பணம் தராமல் மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது இதன் காரணமாக, அவ்வப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இப்படி தகராறு ஏற்பட்ட போது சின்ன தம்பி தன்னுடைய மனைவியை அடித்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் வழக்கம் போல நேற்றிரவு சின்னத்தம்பி தன்னுடைய மனைவியிடம் மறுபடியும் குடிபோதையில் தகராறு செய்திருக்கிறார். இதனை மகன் சின்னதுரை கண்டித்திருக்கிறார் ஆனாலும் மறுபடியும் குடித்துவிட்டு வந்து வீட்டில் சின்னத்தம்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதோடு தன்னுடைய மனைவியை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் உண்டானதாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்னுடைய தந்தை இப்படி தொடர்ச்சியாக குடிப்பதும் தகராறில் ஈடுபடுவதுமாக இருந்ததால் ஆத்திரத்திற்கு உள்ளான மகன் சின்னதுரை, இன்று அதிகாலை வீட்டின் முன் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த தன்னுடைய தந்தையின் தலையில் குழவி கல்லை போட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த சின்னத்தம்பி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சின்னத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.