சென்னை, மேடவாக்கம், பாபு நகர் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (50). இவர், சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் நிலம் விற்பதாக கூறி 65 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஜெகன்நாதன் மதுரையில் தனக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை சண்முகத்திற்கு, கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக பொது அதிகார ஆவணம் தயாரித்து, 65 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, நிலத்தை சண்முகத்திற்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி, குறிப்பிட்ட அந்த நிலத்தை, வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்த மோசடி குறித்து சண்முகம் சில கடந்த நாட்களுக்கு முன்பு, தாம்பரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தாம்பரம் தனிப்படை காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஜெகநாதனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
புகாரின் அடிப்படையில் ஜெகன்நாதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோல் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதற்கு முன்பு கூடுவாஞ்சேரி பகுதியில், 21 சென்ட் நிலத்தை ராஜாமணி, சுப்பிரமணி என்பவர்களிடம், ரூ.1.70 கோடிக்கு ஜெகநாதன் விலை பேசி வாங்கி உள்ளார். இதற்காக நில உரிமையாளர்களுக்கு 30 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்த ஜெகநாதன், மீதி பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளார்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாக, பலரை ஏமாற்றியதுடன் அவர்கள் பெயரில் வங்கிகளில் ரூ.8 கோடி வரை கடன் பெற்று, கட்டிடத்தை முழுமையாக கட்டாமல் ஏமாற்றியுள்ளார். மேலும் பல்லாவரத்திலும், இதே மாதிரி வீடு கட்டி வருவதாக ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜெகநாதனை கைது செய்த காவல்துறையினர், ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.