என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், நெய்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், என்எல்சி சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படைந்து இருப்பதாகவும் ஸ்டெர்லைட் ஆலையை விட என்எல்சி நிறுவனம் 100 மடங்கு ஆபத்தானது எனவும் கூறினார் நிலம் கொடுத்தவர்கள் அகதிகளாக இருப்பதாகவும், என் எல் சி நிறுவனம் 60 ஆண்டு காலமாக ஏமாற்றி வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சுமத்தினார்.
காவல்துறையினரை குவித்து வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி நிலத்தை கையகப்படுத்துவதாக குற்றம் சுமத்திய அவர், தமிழகத்திற்கு எந்த விதமான பலனும் இல்லாததால் என்எல்சி நிறுவனம் தேவை இல்லை என்று கூறினார். இனி கடுமையான போராட்டங்கள் ஆரம்பமாகும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை செய்திருக்கிறார்.