கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டம் குஷால் நகர் தாலுகாவை சேர்ந்த செட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(43). இவரது மனைவி செஸ்மா(34). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் பெங்களூரில் உள்ள சித்தி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி செஸ்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார் கோபால். எனவே அடிக்கடி மனைவியிடம் அது பற்றி கேட்டு தகராறு செய்து வந்துள்ளனர். நேற்று காலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே இது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கோபால், துப்பாக்கியை எடுத்து மனைவியை நோக்கி சுட்டு இருக்கிறார். இதில் துப்பாக்கிக் குண்டு செஸ்மாவின் நெஞ்சில் துளைத்ததில் அவர் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
அதன் பிறகு கோபால் பெங்களூரில் இருக்கும் மகள் மற்றும் உறவினர்களிடம் மனைவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கு வந்து பார்த்தனர். மேலும் செஸ்மா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை எனவும், அவரருடைய கணவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என கூறி மடிக்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செஸ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு கோபாலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.