சென்னை, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல காதணி விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-
அதிமுக பாசமுள்ள கட்சி. அன்போடு அழைத்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஒரு தொண்டராக கலந்து கொண்டேன். மேலும் தி.மு.க. எம்எல்ஏக்கள் பத்து பேர் என்னுடன் பேசி வருகின்றனர். திமுக ஒரு குடும்பக் கட்சி, கார்ப்பரேட் மாடல் எந்த பதவியுமே இல்லாத உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். ராகுல்காந்தி காங்கிரசை வளர்க்க நடை பயணம் போகிறார் என கூறினார்.
மேலும் சசிகலா, தினகரனை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி. தொண்டர்கள் மட்டும்தான் அதிமுக மற்றவர்களுக்கு இடம் இல்லை. தொண்டன் என்ற முறையில் தான் இங்கு வந்துள்ளேன் என பதில் அளித்தார். தொடர்ந்து அவர் கூறியது, அதிமுக அலுவலகத்தில் திருடு போன சம்பவம் குறித்து தற்போது சிபிசிஐடி விசாரணை, காலம் தாழ்ந்த விசாரணை.
மேலும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற முதலமைச்சரும் தமிழகத்தில் இல்லை. நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு தான் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்கின்றனர். பசியும் பட்டினியமாக இருக்கும் ஏழைகளுக்காக அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டது. அதனை மூடியவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கொசஸ்த்தலை ஆற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் பாதிக்கபட கூடாது. குடிநீர் பாதிக்கப்பட கூடாது. அணை கட்டுவதை அரசு தடுக்க வேண்டும் என கூறினார்.