நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜ்ஜவுரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று காலை 13-ஆம் தேதி தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு எடுத்து வரப்பட்டது.
பிறகு அங்கிருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், காவல் துறை சூப்பிரண்டு சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதை தொடர்ந்து ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கிளப்பிய போது தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி வீசப்பட்டது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்த நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின்னரே பாரதிய ஜனதா கட்சியினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.