குன்னத்தூர் அருகே அனையபதியில் வசித்து வருபவர் சசி (40). இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் இன்று காலை சசி வீட்டு செலவிற்காக வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பார்த்த கண்ணன் அதை எடுத்து வந்து குன்னத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். வீட்டில் தான் வைத்த பணம் இல்லாததை கண்ட சசி குன்னத்தூர் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கிருந்த உருட்டு கட்டையால் கோவை சரளா பாணியில் கணவனை அடி வெளுத்து வாங்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த குன்னத்தூர் போலீசார் கணவன் மனைவி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணன் தினமும் குடிபோதையில் இரவு முழுவதும் இது மாதிரி தான் என்னிடம் சண்டை செய்து வருகிறார். மேலும் தகாத வார்த்தையில் பேசி சண்டை போடுகிறார். நான் குடும்பச் செலவிற்கு வைத்திருக்கும் பணத்தை எனக்கு தெரியாமல் எடுத்து குடித்து விடுகிறார் என்று சசி கூறியுள்ளார். ஆனால் கண்ணன் காவல்துறையினரிடம், நான் பத்துக்கு மேற்பட்ட வேலை ஆட்களை வைத்து கட்டிட தொழில் செய்து வருகிறேன். என்னிடம் இருக்கும் பணத்தை வாங்குவதற்கு, எனது மனைவி சசி இது மாதிரி நாடகம் போடுகிறார், என்று கூறினார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.