கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த நெகமம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் அந்த 17 வயது மாணவி. இவரை அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்துவரும் 31 வயது இளைஞர் காளியப்பன் காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,மாணவியின் பின்னால் காளியப்பன் சுற்றி வருவதாக அக்கம்பக்கத்தோர் அவரது மனைவி மகாலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, தனது கணவரை பள்ளி மாணவி காதலிப்பதாக நினைத்து மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப் படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளுக்கு மாறி மாறி தொல்லை கொடுத்த தம்பதியினர் குறித்து பொள்ளாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஒரு நிலையில், காளியப்பன் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதும், அவரது மனைவி மகாலட்சுமி மாணவியிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப் படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அடுத்து காளியப்பன் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.