ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் மாவட்டத்தில் இருக்கும் சன்சோரே பகுதியை சேர்ந்தவர் முகேஷ் பேர்வால். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான முகேஷ் ராஜஸ்தானில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். உஷா என்ற மாற்று சமூக பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு சமீபதத்தில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்து 11 மாதமே ஆன நிலையில் கடந்த வியாழக்கிழமை குழந்தையை முகேஷ் தனது தந்தை வீட்டில் விட்டு வருவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
மனைவி மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தந்தை அனுமதிக்க மாட்டார் என்று சொல்லி மனைவி உஷாவை அங்கு வர வேண்டாம் என முகேஷ் தடுத்து விட்டார். இந்நிலையில், சிறிது நேரம் கழித்து முகேஷ் வீடு திரும்பினார். மனைவியிடம் குழந்தை தந்தை வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், முகேஷ் குழந்தையை வீட்டின் அருகே இருக்கும் நர்மதா நதி ஓடும் கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார். இவரின் செயலை அப்பகுதியில் உள்ள ஒருவர் பார்த்து பதறிப்போய் காவல்துறையிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து,காவல்துறை முகேஷை கைது செய்துள்ளது.
கைதான குழந்தையின் தந்தை முகேஷ் காவல்துறையிடம் தெரிவித்த வாக்குமூலத்தில், முகேஷுக்கு வேலை மூலம் மிகக் குறைந்த வருமானமே கிடைத்துள்ளது. குழந்தையை நல்ல முறையில் வளர்க்க முடியாது என்று குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து, கால்வாயில் தூக்கி வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கால்வாயில் இருந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் கைதான முகேஷை சிறையில் அடைத்துள்ளனர்.