மயிலாடுதுறை அருகே முழையூர் மண்தாங்கி திடல் பகுதியில் வசிக்கும் ராமசாமி மகள் ரம்யா (28). இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்தார். அப்போது, ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்த நெல்லையை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் குமாரை (36) காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
குமார் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதுமாக இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இப்போது தனது சொந்த ஊரில் தாயாருடன் வசித்து வரும் ரம்யா மயிலாடுதுறையில் இருக்கும் பேக்கரி ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ரம்யாவின் கணவர் குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரம்யா குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் காவல்துறையினர் ரம்யாவை கைது செய்தனர். இந்தச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.