நாகை அருகே அகலங்கன் கிராமத்தில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் பாரதி (25). இவர் ஒரு தனியார் மினி பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று நாகையில் இருந்து ஆய்மழை கிராமத்திற்கு பேருந்தை ஒட்டி வந்துள்ளார். நாகை கோட்டைவாசல்படி பேருந்து நிறுத்தத்தில் நாகை ஒன்றியம் அகரஒரத்தூர், காலனி தெருவில் வசித்துவரும் ராமலிங்கம் மகன் அஜித் (27). மற்றும் சிக்கல் பொன்வெளி ராஜேஷ் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கின்றனர். பேருந்து சிறிது தூரம் சென்றவுடன் பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றி விட்டு வேறு பாடல் வைக்குமாறு ஓட்டுனரிடம் கூறியுள்ளனர்.
அதற்கு, ஓட்டுனர் வேறு பாடலை மாற்றுவதற்கு வசதி இல்லை என கூறியுள்ளார். அதன் பிறகு, இருவரும் சிக்கல் பேருந்து நிறுத்தம் பகுதியில் இறங்கி சென்றுள்ளனர். ஆய்மழை கிராமத்திற்கு சென்ற மினி பேருந்து மீண்டும் நாகைக்கு வந்து கொண்டிருந்த போது, சிக்கல் ரெயில்வே கேட் அருகே வந்த போது, வேறு பாட்டுமாற்றி வைக்காததால் ஆத்திரம் அடைந்த அஜித் மற்றும் ராஜேஷ் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தை சாலையில் வழிமறித்து நிறுத்தி இருக்கின்றனர்.
பிறகு, மினி பேருந்து ஓட்டுனர் பாரதி மற்றும் நடத்துனர் பாலமுருகன் ஆகிய இருவரையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி, அவர்களை அஜித் மற்றும் ராஜேஷ் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் பாரதி நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அகரஒரத்தூரை சேர்ந்த அஜித்தை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சிக்கல் பொன்வெளியை சேர்ந்த ராஜேஷ், அரவிந்தன், அக்கரைப்பேட்டை கதிர்வேல் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.