பல்லாரி நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆன பிறகும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் நடந்துள்ளது. பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 12 வயதில் பாஸ்கர் என்ற மகன் இருக்கிறான்.
இந்நிலையில் நேற்று காலையில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்த பாஸ்கர், எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தேங்கி இருந்த குழியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இதை தொடர்ந்து தண்ணீர் தேங்கிய குழியில் பாஸ்கர் பிணமாக மிதப்பதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். அப்போது முகநூலில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மீது உப்பை கொட்டி மூடினால் இரண்டு மணி நேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் என்று ஒரு பதிவை படித்தது சேகருக்கு ஞாபகம் வந்தது.
இதனால் அவர் பாஸ்கர் உடல் மீது உப்பை கொட்டி மூடினார். ஆனால் எட்டு மணி நேரம் ஆகியும் அவரது மகன் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை. அதன்பிறகு பாஸ்கரின் உடல் உப்பு குவியலில் இருந்து எடுத்து இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பாஸ்கர் உடல் மீது உப்பு குவியல் கொட்டி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.