திருநெல்வேலி நீதிமன்றத்தில் வைத்து ஆஜராக வந்த மதபோதகரை வெட்ட முயன்ற வாலிபரை காவல்துறையினர், துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். நெல்லை பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி ரோட்டில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில், ஒரு வழக்கு விசாரணைக்காக நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மதபோதகர், ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார்.
அந்த மதபோதகர் கோர்ட்டில் இருந்தபோது வாலிபர் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜோஸ்வா இமானுவேலை வெட்டிக் கொலை செய்ய பாய்ந்து சென்றார். அப்போது மற்றொரு வழக்கில் கைதியை ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்த போலீஸ்காரர் வேணுகோபால் என்பவர் விரைந்து சென்று அரிவாளுடன் வந்த வாலிபரை துப்பாக்கி முனையில் மடக்கினார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவல்துறையினர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். பிறகு அந்த வாலிபரை பாளையங்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பிடிபட்ட வாலிபர் தாழையூத்து பாப்பான்குளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவநீதகிருஷ்ணன் (30) என்பது தெரிந்தது. மேலும் மதபோதகர் ஜோஸ்வா இமானுவேல் கடந்த சில வருடங்களாக தாழையூத்து பகுதியில் வீட்டில் வைத்து ஜெபம் செய்து வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நவநீதகிருஷ்ணனின் தங்கையை ஜோஸ்வா இமானுவேலுவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன் பிறகு நடந்த பிரச்சினைகளால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 2016-ஆம் வருடம் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் நவநீதகிருஷ்ணன் கடும் கோபத்தில் இருந்தார். தங்கை இறப்புக்கு பழி வாங்க ஜோஸ்வா இமானுவேல் உள்ளிட்டவர்களை கொலை செய்ய நவநீதகிருஷ்ணன் முடிவு செய்தார். அதன்படி 2017 ஆம் வருடம் தாழையுத்தில் உள்ள பூரணவள்ளி என்ற பெண்ணை கொலை செய்தார். மேலும் மதபோதகரின் கார் டிரைவரான வினோத்தை நெல்லை மேலப்பாளையம் பகுதியில் வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து நவநீதகிருஷ்ணன் மீது தாழையூத்து மற்றும் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நவநீதகிருஷ்ணனை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணன் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியில் வந்த நிலையில் ஜோஸ்வா இமானுவேலை கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை பின் தொடர்ந்து நீதிமன்றம் வந்துள்ளார். மத போதகர் நீதிமன்றத்திற்குள் சென்று விட்டதால் அங்கு வைத்து வெட்டிக் கொலை செய்ய நவநீதகிருஷ்ணன் முயன்றுள்ளார். மேற்கண்ட தகவல் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். நெல்லை நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.