குமரி மாவட்டம் பெரியவிளை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி ஞானபாக்கிய பாய்(32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். செந்தில், சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி ஞானபாக்கிய பாய் கொட்டாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக இருக்கிறார். கணவன், மனைவி இருவரும் தினமும் வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் பேசுவது வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி நேற்று ஞானபாக்கிய பாய், கணவர் செந்திலுடன் வாட்ஸ்அப் காலில் பேசியுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஞானபாக்கிய பாய் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக மனைவி செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த செந்தில், அருகில் இருப்பவர்களுக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
எனவே கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது, ஞானபாக்கிய பாய் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.